திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து

அமெரிக்கத் தமிழ் வானொலி நிறுவனரும் (இப்போது அமெரிக்கத் தமிழ் ஊடகம்), வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் மேனாள் செயலாளரும், சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ்மன்றத்தின் மேனாள் தலைவருமான திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து அவர்கள் ஜூலை 20ஆம் தேதியன்று காலமானார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தரைக்குடி எனும் சிற்றூரில் பிறந்த ஆறுமுகம் பேச்சிமுத்து அவர்கள், அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் வாயிலாகத் தமிழ்மொழி, தமிழ்ச்சமூகம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தியவர். இயற்கைப் பேரிடர், கொரோனா கொடுந்தொற்று போன்ற சோதனையான காலக்கட்டங்களில், பாதிக்கப்பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்கு நிதி நல்குவதற்கான நிகழ்ச்சிகளை நடத்திப் பொருளுதவி செய்தவர். காவிரிப் பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை என்று தமிழகம் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கும், தீர்வுவேண்டி, அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் வாயிலாகத் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர். மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் ’நன்றே செய்’ எனும் சாதனை நிகழ்ச்சியை நடத்தியவர். ஈழத்தமிழர் சுயஉரிமைப் போராட்டத்திற்கு, அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் வழியே, உலகளாவிய அளவில், பல முன்னெடுப்புகளைச் செய்தவர்.
”தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகைசெய்தல் வேண்டும்” எனும் மகாகவி பாரதியின் கனவை, படைப்பாளர் உலகம், புத்தகத் திறனாய்வு, திருக்குறள் சிந்தனைகள், நீதிநூற் கருத்துக்கள், அறிவோம் அறிஞர்களை எனப் பல தரமான நிகழ்ச்சிகளை அமெரிக்கத் தமிழ் ஊடகத்தில் ஒலிபரப்பியதன் மூலமாக நனவாக்கிய நல்லிளைஞர் திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து அவர்கள்.

ஒல்லும் வகையிலெல்லாம் தமிழ்ச் சமூகத்திற்கு நல்லவை செய்துவந்த அந்த அரிய மனிதர், தம் ஐம்பது அகவையை நிறைவுசெய்வதற்குள்ளாகவே இயற்கையோடு கலந்தது தமிழர்களாகிய நம் தவக்குறைவே. எனினும், இனிய முகமும் கனிவான பேச்சும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத அடக்கமும் கொண்ட அந்தப் பண்பாளர் என்றும் தமிழர் நெஞ்சில் நீங்காது நிலைத்திருப்பார்.

அவரை இழந்து ஆற்றொணாத் துயரில் ஆழ்ந்திருக்கும் அவருடைய மனைவி ஜெயஜூலியட்டுக்கும், பிரதீப், கவின், நிலா எனும் பிள்ளைகளுக்கும் இந்தத் துயர்மிகு வேளையில் நாம் துணைநிற்போம்; அவர்களுக்கு நம்மால் இயன்ற நிதியுதவி செய்வோம்!

நிதியுதவி செய்ய விரும்பும் நண்பர்கள் கீழ்க்கண்ட தொடுப்புக்கு (link) சென்று நிதி நல்கலாம். https://gofund.me/f8368bbb

Final walkthrough: https://www.youtube.com/watch?time_continue=1&v=vJVlbEn1IC8&feature=emb_title

இப்படிக்கு,
அமெரிக்கத் தமிழ் ஊடகம்

www.tamilmedia.org

atr@tamilmedia.org